கண்டியில் கட்டுப்பாடின்றி கூட்டம் – இராணுவம் நிலைநாட்டல் நடவடிக்கையில், காவல்துறையின் புதிய திட்டம்

கண்டியில் நடைபெறும் “சிரி தலதா வந்தனையை” முன்னிட்டு குவிந்த 4 இலட்சம் பக்தர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில், இன்று (23) இரவு முதல் விசேஷ அடையாள அட்டைப் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

மத்திய மாகாண சிரேஷ்ட டிஐஜி லலித் பதிநாயக்க மற்றும் கண்டி–மாத்தளை டிஐஜி சுதத் மசிங்கே இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர். தினசரி 100,000 பேரை அனுமதித்தாலும், தற்போதுள்ள எண்ணிக்கையை கையாள மேலும் குறைந்தது மூன்று நாட்கள் தேவைப்படும் என தெரிவித்தனர்.

இது கட்டுப்பாடற்ற நிலையை எட்டியதால், மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்த இராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பொது மக்களுக்கு வரும் இரண்டு நாட்களில் கண்டிக்கு பயணம் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மற்றுமொரு தகவலின்படி, வரிசையில் காத்திருந்த ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், கொழும்பிலிருந்து கண்டிக்கு இயக்கவிருந்த சிறப்பு ரயில் சேவைகளும் இரத்துசெய்யப்பட்டுள்ளது.