இலங்கைக்கு அமெரிக்காவிடமிருந்து மிகப்பெரிய வரி சலுகை – அமைச்சர் அறிவிப்பு

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% மாறுபட்ட (reciprocal) வரியை விதிக்க தீர்மானித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல் 2ஆம் திகதி, 44% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அமலாக்கக் கால அவகாசம் ஜூலை 9 இல் முடிவடைந்தது. புதிய 30% வரி 2025 ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்.

கடிதத்தில் டிரம்ப் மேலும் கூறியிருப்பதாவது:

“இலங்கை தனது இறக்குமதி வரிகளை அதிகரித்தால், அது எந்த அளவிற்கு அதிகரிக்கப்படும் என்ற அடிப்படையில் அமெரிக்காவின் தற்போதைய 30% வரிக்கு மேலதிகமாக அதே அளவு சேர்க்கப்படும். இலங்கை கடைசி பல ஆண்டுகளில் அமுல்படுத்திய வரி மற்றும் வரிக்கு அப்பாலான (Non-Tariff) கொள்கைகள் மற்றும் வர்த்தகத் தடைகள், அமெரிக்காவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதை சீர்செய்யவே இந்த வரிகள் அவசியமாகும்.”

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் இந்த வரி 44% இலிருந்து 30% ஆக குறைக்கப்பட்டுள்ளதை நற்கோட்டணையாக வரவேற்றுள்ளது.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கூறுகையில்:

“பட்டியலிலுள்ள நாடுகளுள், இலங்கையே மிகப்பெரிய வரிச்சலுகையை பெற்ற நாடாகும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் தூதரக முயற்சிகளின் பலனாகும்.”

இதேவேளை, இலங்கையைத் தவிர மற்ற ஆறு நாடுகளுக்கும் அமெரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது:

  • அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா – 30%
  • புருனை மற்றும் மோல்டோவா – 25%
  • பிலிப்பைன்ஸ் – 20%

மேலும், கடந்த திங்கட்கிழமையன்று 14 நாடுகளுக்கு புதிய வரிகள் அறிவிக்கப்பட்டன. அதனுடன், பிரேசிலுக்கு 50% வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.